வீட்டு உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில் விசாரணைக்கு சென்ற சிறப்பு எஸ்ஐக்கு அடி: 5 வடமாநில வாலிபர்கள் கைது
அம்பத்தூர், செப்.30: அம்பத்தூர் அத்திப்பட்டு வெள்ளாளர் தெருவில் வட மாநில இளைஞர்கள் மது போதையில் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி மூலம் நேற்று புகார் வந்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அதிகளவு மது போதையில் இருந்த 5 வட மாநில இளைஞர்கள் வீட்டின் உரிமையாளர் பிரபு மற்றும் தாமோதரன் ஆகியோரை தாக்கியது தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரித்தபோது சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகத்தையும் வீட்டுக்குள் தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் சண்முகம் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் தகராறு செய்த 2 வட மாநில இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நேற்று 5 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.