திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வட்டங்களில் வண்டல் மண் அள்ளுவதில் விதிமீறல் ஏரி, குளங்கள் பாழாகும் அவலம்: வருவாய் அதிகாரிகள் மெத்தனம் விவசாயிகள் குற்றச்சாட்டு
திருத்தணி,செப்.30: திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வட்டங்களில் ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ளுவதில் விதிகள் மீறி வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன், வியாபாரிகள் நீர்நிலைகளில் அதிக ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஏரி, குளங்கள் சீரழிந்து வருகிறது. ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகிறது. விவசாயம் சாகுபடியை பெருக்கும் வகையில் ஏரி, குளங்களில் வருவாய் துறை அனுமதியுடன் விவசாயிகள் வண்டல் மண் அள்ளி விளை நிலங்களுக்கு பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகள் சிட்டா மூலம் ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் வழங்க வட்டாட்சியருக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு 75 கன மீட்டர், புஞ்சை நிலத்திற்கு 90 கன மீட்டர் என வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் திருத்தணி உட்கோட்டத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் சிட்டாவை முறைகேடாக பயன்படுத்துகின்றனர். சிலர் முறைகேடாக பொக்லைன் மூலம் டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக செங்கல் சூளை, வீட்டு மனைகளுக்கு பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டாட்சியர் அனுமதி வழங்கும் நிலையில், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் குளம், ஏரி, குட்டையில் மண் எடுக்கும் அளவை குறியீடு செய்து வழங்க வேண்டும். ஆனால் அதுபோன்று எந்த கட்டுப்பாடும் பின்பற்றாத நிலையில் சுமார் 5 அடி முதல் 10 அடி ஆழத்திற்கு பொக்லைன் மூலம் பள்ளம் வெட்டி ஏரி குளங்களை சீரழித்து வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வண்டல் மண் அனுமதி பெற்றுவிட்டு கிராவல் மண்ணை வெட்டி எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் ஏரி நீர் பாசன வசதி பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே முறைகேடாக வண்டல் மண் மற்றும் கிராவல் மண் அள்ளப்படுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.