ஆவணி மாத முதல் முகூர்த்தம் திருத்தணி முருகன் கோயிலில் 70 ஜோடிகளுக்கு திருமணம்
திருத்தணி, ஆக.30: ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று திருத்தணி முருகன் கோயிலில் கெட்டிமேளம் முழங்க 70 ஜோடிகளுக்குத் திருமணம் நடந்தது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் திருமணம் நடைபெற்றால், அவர்களின் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், திருத்தணி முருகன் மலைக்கோயிலில் திருமணத்தை மிகுந்த ஆர்வமுடன் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று காலை திருத்தணி முருகன் மலைக்கோயிலில், கோயில் நிர்வாக அனுமதியுடன் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
மலைக்கோயிலில் காவடி மண்டபம், ஆர்.சி.மண்டபம், வசந்த மண்டபம் பகுதிகளிலும் ஏராளமான திருமணங்கள் நடந்தன. இதற்காக மலர்களால் திருமண பந்தல் அலங்கரிக்கப்பட்டு பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் ஆசியுடன், கெட்டி மேளம் முழங்க 70 ஜோடிகளின் திருமணங்கள் நடைபெற்றன. மலைக்கோயிலில் நேற்று காலை அதிகபட்சமாக 70 ஜோடிகளின் திருமணங்கள் நடைபெற்றதால், மலைக்கோயிலில் ஏராளமான வாகனங்களில் மக்கள் குவிந்தனர். அதிகாலை முதல் காலை 9 மணிவரை அடுத்தடுத்து திருமணம் நடைபெற்றதால், மலைக்கோயிலில் கெட்டிமேளம் சத்தம், திருமண ஜோடிகளின் ஆரவாரம், உறவினர்களின் உற்சாக கூக்குரல் எதிரொலித்தன. பின்னர், திருமணம் முடித்து புதுமணத் தம்பதிகள் முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இங்கு மட்டுமின்றி திருத்தணி நகரில் உள்ள பல்வேறு தனியார் திருமண மண்டபங்களில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. இதனால் திருத்தணி நகரமே பொதுமக்கள் கூட்டத்தில் நிரம்பி கோலாகலமாக காணப்பட்டது. இதனால், அரக்கோணம் சாலை, மலைக்கோயில் பாதையில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர் செய்தனர். பக்தர்கள் தடையின்றி முருகனை தரிசிப்பதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
தங்கத்தேர் பவனி
திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி மாதம் விசாகம் நட்சத்திரம் முன்னிட்டு நேற்று மாலை வள்ளி தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார். சாமிக்கு சிறப்பு தீபாராதனையைத் தொடர்ந்து தேர் வீதியில் ஏராளமான பக்தர்கள் கூடியிருக்க ‘அரோகரா, அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன், சிவ பூத வாத்திக் குழுவினரின் மேலதாளங்கள் அதிர தேர்பவனி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பூர தீபாராதனை செய்து சாமி தரிசனம் செய்தனர். தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில் தங்கத்தேர் பவனிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.