திருவள்ளூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் கோலாகலம்: காக்களூர் ஏரியில் கரைப்பு
திருவள்ளூர், ஆக. 30: திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 27ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில்கள், முக்கிய இடங்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபாடு செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இதில் திருவள்ளூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், காக்களூர், செவ்வாய்பேட்டை, ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, ஒதிக்காடு, மணவாளநகர், வெங்கத்தூர், ஒண்டிக்குப்பம், பட்டறை, மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், திருப்பாச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்த், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் வெகு சிறப்பாக நடந்தது. ஊர்வலத்தின் போது விநாயகர் சிலைகள் முன்பு சிலை அமைப்பாளர்கள் மேள, தாளம், பேண்டு வாத்தியத்துடன், சிலம்பம், கரகாட்டம் போன்றவற்றுடன் உற்சாகமாக நடனமாடி சென்றனர்.
இந்த விநாயகர் சிலை ஊர்வலம் ஆயில்மில் பகுதியிலிருந்து புறப்பட்டு ஜெ.என்.சாலை, ராஜாஜி சாலை, தேரடி, காக்களூர் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்த சுக்லா தலைமையில், திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி உள்பட 3 டிஎஸ்பிக்கள் மேற்ப்பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட 19 நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.