கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் எரும்பி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆர்.கே.பேட்டை, ஆக.30: ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், எரும்பி ஏரி முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் மொத்தம் 38 ஏரிகள் உள்ளன. இதில், 10 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், 28 ஏரிகள், குளங்கள் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பிலும் உள்ளன. கடந்த சில மாதங்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் குளம், குட்டைகள் அனைத்தும் வரண்டு காணப்பட்டன.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதி மக்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக திடீர் திடீரென பெய்த கனமழையில் ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால், ஏரிகளின் நீர்மட்டம் 25 சதவீதம், 50 சதவீதம் என நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்ததால் எரும்பி கிராம ஏரி அதன் முழுகொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், விவசாயப் பணிகளுக்கான நீர் பாசனம் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.