கன மழை எதிரொலியாக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
திருவள்ளூர், நவ.29: வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 33.88 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2785 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 790 கன அடி மழைநீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 21.83 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3075 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 100 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 18.99 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2811 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 235 கன அடியாக உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி விதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 12.90 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 550 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 45 கன அடி வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 200 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 34.70 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 437 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11757 தற்போது 9658 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக கொசஸ்தலை ஆறு வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.