அண்ணன் உறவுமுறை சிறுவனுடன் காதல் முறையற்ற கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழப்பு: நர்ஸ் உள்பட இருவர் கைது பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு
திருத்தணி, ஆக. 29: பள்ளிப்பட்டு அருகே, ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் செவிலியர் டிப்ளமோ பயிற்சி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதித்ததில், அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியான பெற்றோர், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவியை அண்ணன் உறவு முறையில் உள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் காதலித்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுவன் மீது போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்துள்ளனர்.
இதற்கிடையே, 5 மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவியை, ஆந்திராவில் உள்ள நகரி அருகே பன்னூருக்கு கடந்த 14ம் தேதி கருக்கலைப்பு செய்வதற்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த நர்ஸ் ஒருவர், கல்லூரி மாணவிக்கு கருக்கலைப்பு செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஓரிரு நாட்களில் கல்லூரி மாணவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. அவரை திருத்தணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்ததில், கல்லூரி மாணவியின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் அந்த மாணவியை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை மாணவி பரிதாபமாக பலியானார்.
மாணவிக்கு முறையற்ற கருக்கலைப்பு செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக போலீசாருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து, மாணவிக்கு முறையற்ற கருக்கலைப்பு செய்த ஆந்திர மாநிலம் நகரி அருகே பன்னூர் பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நர்ஸ் வயலட் காணிக்கி, மாணவியின் சித்தப்பா ஹரிபாபு ஆகிய 2 பேரை அனைத்து திருத்தணி மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். முறையற்ற கருக்கலைப்பால் கல்லூரி மாணவி இறந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.