புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து மீண்டும் 100 கன அடி உபரி நீர் திறப்பு
புழல், நவ.28: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியிலிருந்து மீண்டும் 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2823 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 19.05 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 405 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, புழல் ஏரி 85% நீர் இருப்பை கொண்டுள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் 2 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஏரியின் பாதுகாப்பு கருதியும், நீர்த்தேக்கத்தில் கொள்ளளவை குறைத்து, வெள்ள தாங்கு திறன் அதிகரிக்கும் வகையில் ஏரியில் இருந்து நடப்பாண்டில் 5வது முறையாக மீண்டும் 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் கலக்கிறது. இதன் காரணமாக, கரையோர பகுதிகளான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார்.
படிப்படியாக உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.