கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் ஒன்றிய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி இயக்குநர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி, நவ.28: கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் ஒன்றிய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுகொள்ளை தெரு பகுதியில் சுமார் 30 ஏக்கரில் தாமரை ஏரி உள்ளது. இந்த தாமரை ஏரியானது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கியது. ஏரிநீர் பாசனத்தின் மூலம் 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மூன்று போகம் நெல், கிழங்கு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் தாமரை ஏரியில் கலந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. இதனால், ஏரிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பாஜ சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மற்றும் பேரிடர் மேலாண்மை குழு மாநில செயலாளர் குணசேகரன், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் ஸ்ரீ பூபேந்தர் யாதவுக்கு எழுதிய அவசரக் கடிதத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் மூலம், சுமார் 50 ஆயிரம் குடிமக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தி வரும் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண, ஒன்றிய அரசின் மாசுக்காட்டு வாரிய உதவி இயக்குநர் பூர்ணிமா, அறிவியல் வல்லுனர்கள் சுஷ்மிதா, கஜலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏரியின் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்து நீர் மாதிரிகளை சேகரித்தனர். அப்போது, பொதுமக்கள் தங்கள் உடலில் ஏற்பட்ட தோல் நோய்கள், வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் நகைகளின் நிறமாற்றம் போன்ற பாதிப்புகளை நேரடியாகக் காண்பித்து, ஏரியின் சீரழிவால் தாங்கள் அனுபவிக்கும் சுகாதாரச் சிக்கல்களை விளக்கினர்.
நிலத்தடி நீர் மாசு: குடிநீர் ஆதாரமான நிலத்தடி நீரின் மொத்தக் கரைந்த திடப்பொருட்களின் அளவு 1602 எம்ஜி/எல் ஆக உயர்ந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குடிநீருக்கான நிர்ணயிக்கப்பட்ட வரம்பான 500 எம்ஜி/எல்-ஐ விட மும்மடங்கு அதிகம் என்பது கவலை அளிக்கிறது. தாமரை ஏரியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதை அதிகாரபூர்வக் குழுவினர் உறுதி செய்தனர். கழிவுநீர் மற்றும் ரசாயனக் கலப்பினால் ஏரி நீர் கருப்பாக மாறி, கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கள ஆய்வின் விவரங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளின் ஆய்வறிக்கை ஆகியவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உடனடியாகச் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் பாஜ உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் பாஸ்கர், மாநிலச் செயலாளர் பாலாஜி, மாவட்டத் தலைவர் சுந்தரம், மாநில செயலாளர் நரேஷ், மண்டல தலைவர் சந்திரசேகர், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் அஜய்குமார் மற்றும் பாஜ நிர்வாகிகள் உடனிருந்தனர்.