செங்குன்றம்-சோத்துப்பாக்கம் இடையே இருளில் மூழ்கும் மாநில நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
புழல், அக்.28:செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலை பாலவாயல் சந்திப்பு முதல் கும்மனூர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் இருளில் முழுகி உள்ளது. இதனால், சோத்துப்பாக்கம் சாலையில் செல்லும் பொதுமக்கள் பெண்கள் இரவு நேரங்களில் சிரமப்பட்டு வருகின்றனர். செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளான தீர்த்த கரைம்பட்டு, பாலவாயல், விவேக் அக்பர், அவென்யூ குமரன் நகர், ஸ்டார் சிட்டி சன் சிட்டி, கோட்டூர், அத்திவாக்கம், புள்ளி லைன் புதுநகர், குப்பமணி தோப்பு, விளாங்காடு பாக்கம், மல்லி மாநகர், தர்காஸ், கண்ணம்பாளையம், கும்மனூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ளன. பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும் கடைகளும் உள்ளன. பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் செங்குன்றம் வழியாக சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்ல சோத்துப்பாக்கம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சோத்துப்பாக்கம் சாலையில் இரவு நேரங்களில் சாலை விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கி கிடப்பதால் பொதுமக்களும் வேலைக்கு செல்லும் பெண்களும் இரவு நேரங்களில் இச்சாலையை ஒருவித அச்சத்துடன் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இருள் சூழ்ந்துள்ளதால் சமூக விரோதிகள் தனியாக செல்லும் பெண்களிடம் வழிப்பறி கொள்ளை போன்ற அசம்பாவிதங்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் இச்சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைத்து சாலை சீரமைக்கப்பட்டது. எனினும் சாலை விளக்குகள் அமைக்கப்படாததால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே மாலை நேரத்துக்கு பின் இரவு நேரங்களில் இச்சாலையில் சென்று வருகின்றனர்.
மேலும், இவ்வழியே 57சி என்ற ஒரே ஒரு வழித்தட பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது. இவ்வழியே மீஞ்சூர், மணலிபுதுநகர், பொன்னேரி, கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் மின் விளக்குகள் அமைத்து கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.