நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்
புழல், அக்.28: புழல் ஏரியில் நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து கடந்த 15ம்தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இவ்வாறு, பெய்து வரும் மழையின் காரணமாக புழல் ஏரிக்கு 335 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 265 கன அடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து, நீர்வரத்து சரிந்ததால் புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த 250 கன அடி உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2674 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.33 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 708 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று முன்தினம் 332 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 312 கன அடியாக சரிந்துள்ளது. 18.86 அடி உயரத்தில் தற்போது 15.52 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளதால், ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.