செல்வப்பெருந்தகை பற்றி அவதூறு பேச்சு எடப்பாடியை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பொன்னேரி, செப்.27: சுற்றுப்பயணத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து பேசிய கருத்துகள் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மீஞ்சூரில் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டபோது போலீசார் அதனை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தினர். அவதூறான கருத்துகளை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதில், ஜெயசீலன், சாய் சரவணன், நந்தா, கண்ணாடி ராஜேந்திரன், ஜெய்சங்கர், அன்பரசு, பழனி, வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.