கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு தொழிற்சாலை நச்சு புகையால் மாணவிகளுக்கு மூச்சுத் திணறல்: மருத்துவமனையில் சிகிச்சை
கும்மிடிப்பூண்டி, ஆக. 27: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலானவை இரும்பு உருக்காலை மற்றும் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகும். அதிலிருந்து தினந்தோறும் நச்சுப் புகை வெளியேற்றுகிறது. இதனால் பாப்பன்குப்பம், சித்தராஜ் கண்டிகை, சிறுபுழல் பேட்டை, புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட கிராம மக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சித்தராஜ்கண்டிகை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மதியம் சுமார் ஒரு மணி அளவில் 10ம் வகுப்பு மாணவிகளான காயத்ரி, யுவஸ்ரீ, சுருதி, துர்கேஸ்வரி ஆகியோர் உணவு அருந்திவிட்டு பள்ளி வாசலில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது 4 மாணவிகளுக்கும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈகுவார்பாளையம், கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 2 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் தொடர்ந்து இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைையில் இருந்து வெளியேறும் புகையால் மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் தினந்தோறும் சிப்காட்டைச் சுற்றி உள்ள கிராமங்களில் ஏற்கனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அலட்சியப்போக்கினால் பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் கலெக்டர் கும்மிடிப்பூண்டி சிப்காட், சித்துராஜ் கண்டிகை, பெரிய ஒபுளாபுரம் ஆகிய பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிற்சாலை புகையால் மாணவிகள் பாதிக்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.