மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு
ஊத்துக்கோட்டை, நவ.26: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், ஊர் எல்லையில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் 916 ஏக்கர் கொண்ட ஈசா ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகில் உள்ள மீன் குட்டையில் அப்பகுதியை சேர்ந்த தனி நபர்கள் சிலர் மீன் பிடித்த வலை சேதமாகி விட்டதால் அந்த வலையை ஏரிக்கரை ஓரமாக போட்டு விட்டனர். இந்நிலையில், நேற்று இரவு ஆந்திரா மலைப்பகுதியில் இருந்து ஏரிப்பகுதிக்கு மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்த போது ஏரிக்கரை ஓரமாக இருந்த வலையில் சிக்கிக்கொண்டது. இதனைக்கண்ட மக்கள் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ சேகருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறை மற்றும் சீத்தஞ்சேரி வனத்துறையினர் அங்கு வந்து, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் விநாயக மூர்த்தி தலைமையில் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அங்கு வந்த சீத்தஞ்சேரி செங்குன்றம் வனத்துறை வனக்காப்பாளர்கள் விக்னேஷ், அதிசயம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதனால், ஊத்துக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.