திருவாலங்காடு அருகே பாகசாலை, குப்பம் கண்டிகையில் 2 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின: போக்குவரத்து துண்டிப்பால் 10 கிராம மக்கள் அவதி
திருத்தணி, அக்.26: திருவாலங்காடு அருகே, கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகசாலை, குப்பம் கண்டிகை ஆகிய பகுதிகளில் 2 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் திருவள்ளூர், பேரம்பாக்கம் பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில், பாலாற்றில் இருந்து கரைபுரண்டு வரும் வெள்ளத்தால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் நோக்கி சீறிபாய்ந்து செல்கிறது. இதனால், பாகசாலை-குப்பம் கண்டிகை ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள 2 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், குப்பம் கண்டிகையிலிருந்து திருவள்ளூர் செல்லவும், பாகசாலை வழியாக பேரம்பாக்கம் பகுதிக்கு செல்ல போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், குப்பம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திருவாலங்காடுக்கு வந்து, அங்கிருந்து திருவள்ளூர் செல்ல 20 கி.மீ சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பேரம்பாக்கம் பகுதிக்கு செல்ல ஒரத்தூர், களாம்பாக்கம் பகுதிகள் வழியாக 10 கி.மீ சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.