திருவள்ளூர் அருகே அறுவடை நெல் மழையில் நனைந்து முளைத்தது
திருவள்ளூர், அக்.26: திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து முளைத்து சேதமானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் அடுத்து புன்னப்பாக்கம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில், சிறு, குறு விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர், விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகள், கடந்த 40 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்த நெல்லை காய வைத்து விற்பனைக்காக தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் கோணிப் பைகள் இல்லை, சணல் இல்லை போன்ற காரணங்களை கூறி, கடந்த 40 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது, பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், காய வைக்கப்பட்டிருந்த நெல் முழுவதும் நனைந்து விட்டது. மழையில் நனைந்த நெல் அனைத்தும் முளைத்து, நாற்று விடும் அளவிற்கு வந்துவிட்டது. அறுவடை செய்து விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சுமார் 500 நெல் மூட்டைகள் வரை மழையில் நனைந்து வீணாகி உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும், என்றும் விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.