13 வயது சிறுமியை சீரழித்த தாயின் 2வது கணவனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை: உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாதம் சிறை
திருவள்ளூர், நவ.25: திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை சீரழித்த தாயின் 2 வது கணவனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே தேவலாம்பாபுரம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் தரணி(54). அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபியம்மாள்(46). இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், கணவனை பிரித்து வீட்டை விட்டு ஓடிச் சென்று கடந்த 2018ம் ஆண்டு 2வதாக தரணியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கோபியம்மாளின் ஒத்துழைப்போடு 7ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மகளை தரணி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். நேற்று நடந்த விசாரணையில், நீதிபதி உமா மகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாய் கோபியம்மாளின் 2வது கணவன் தரணிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தாய் கோபியம்மாளுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து நேற்று 2 பேரையும் ஆர்.கே.பேட்டை போலீசார் சென்னை புழல் சிறைச் சாலையில் அடைத்தனர்.