மாவட்ட நிர்வாகம் சார்பில் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது: திருவேற்காட்டில் ஆய்வுக்குப்பின் கலெக்டர் பிரதாப் பேட்டி
பூந்தமல்லி, அக்.25: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வேலப்பன்சாவடி நூம்பல் பிரதானச் சாலையில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், நீர்வள ஆதாரத்துறை சார்பில் வேலப்பன்சாவடி உயர்மட்ட பாலம் அருகில், மாதிராவேடு தரைப்பாலம் அருகில், காடுவெட்டி உயர்மட்ட மேம்பாலம் அருகில் ஆகிய பகுதிகளில் கூவம் நீர் வழி பகுதிகளில் செடி, கொடிகளை அகற்றி தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் இந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் சுமங்கலி கார்டன், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். முன்னதாக வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டு வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் அறிந்தார்.
இதையடுத்து, கலெக்டர் பிரதாப் செய்தியாளரிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் இருக்க மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை உடனுக்குடன் கண்டறிந்து அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் நேரில் சென்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அறிவுறுத்தியதன் பேரில் அனைவரும் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர்.
திருவேற்காடு நகராட்சி, அயப்பாக்கம் ஊராட்சி, சென்னீர்குப்பம் ஊராட்சி உள்ளிட்ட சென்னையை ஒட்டிய பகுதிகளில் மழை நீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளையும் செய்துள்ளோம். திருவேற்காடு நகராட்சி ஐசிஎல் ஹோம் டவுன் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் ஒரு வாரக் காலத்திற்குள் முடிவடைந்து அப்பகுதியில் முழுமையாக தண்ணீர் தேங்காத சூழ்நிலை ஏற்படும். இன்னும் சில நாள்களில் அதிக அளவு கனமழை பெய்யவுள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது திருவேற்காடு நகர்மன்றத் தலைவர் மூர்த்தி, ஆணையர் ராமர், திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர்கள் உதயம் (பூந்தமல்லி), கண்ணன் (ஆவடி), நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் மகேந்திரகுமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.