ஊத்துக்கோட்டையில் அறிவுசார் நகரம் அமைக்க டெண்டர்: ரூ.89 கோடியில் உட்கட்டமைப்பு பணிகள் தமிழக அரசு திட்டம்
ஊத்துக்கோட்டை, செப்.25: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவுசார் நகரம் குறித்து அறிவிப்பு முதன் முறையாக வெளியாகி இருந்தது. தமிழ்நாட்டில் உலகளாவிய பங்களிப்புடன் அறிவு நகரம் உருவாக்கப்படும் என்றும், அதில் உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் அறிவுசார் தொழிலகங்கள் அனைத்தும் இந்த அறிவுசார் நகரத்தில் அமைந்திருக்கும்.
பசுமையான வாழ்விட சூழலில் அடுத்த தலைமுறைக்கான புத்தாக்கத்தை உத்வேகத்துடன் ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்நகரம் திகழும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அறிவுசார் நகரத்திற்கான உட்கட்டமைப்பு பணிகளை ரூ.89 கோடியில் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 413.25 ஏக்கரில் அறிவுசார் நகரத்துக்கான உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த நகரத்திற்கான சாலை, மழைநீர் வடிகால், சிறுவாய்க்கால் பாலங்கள், கழிவுநீர் குழாய்களை அமைக்க டெண்டர் கோரி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.