எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
ஊத்துக்கோட்டை, அக்.24: ஊத்துக்கோட்டை அருகே கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். மேலும், விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று பாதிப்பை கணக்கீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம் மற்றும் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம், தும்பாக்கம், வடமதுரை பனப்பாக்கம், கன்னிகைப்பேர் போன்ற பகுதிகளில், இங்குள்ள விவசாயிகள் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல் பயிர்கள் நடவு செய்தனர். வடகிழக்கு பருவ காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால், விவசாயிகள் மூழ்கிய நெல் பயிரில் இருந்து தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், இன்னும் ஓரிரு நாட்கள் பயிர்கள் தண்ணீரில் கிடந்ததால் அழுகி விடும். இதனால், பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக, வேளாண்மை துறை அதிகாரிகள் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று பாதிப்பை கணக்கெடுத்து, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதோபோல், ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம், பேரிட்டிவாக்கம், வேளகாபுரம் போன்ற பகுதிகளில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இங்குள்ள விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பயிர்கள் நடவு செய்து 10 நாட்களே ஆன நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, பெய்த மழையால் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. அதுமட்டுமல்லாமல், இந்த நெல் பயிர்கள் தண்ணீரில் 2 நாட்களுக்கு மேல் இருந்தால் பயிர்கள் அழுகி விடும். இந்த பயிர்களை விவசாயிகள் வேதனையுடன் பார்த்து வருகின்றனர். இது சம்மந்தமாக வேளாண்மை துறை அதிகாரிகள் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று பாதிப்பை கணக்கெடுத்து, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.