சென்னையில் இருந்து குமரி சென்றபோது ரயிலில் பயணி தவறவிட்ட 18 சவரன், பணம் மீட்பு
போரூர், நவ.22: சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் கணேஷ் செந்தில்குமார் (36). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னையிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். நேற்று காலை ரயில் ஆரல்வாய்மொழி நிலையத்தில் ரயில் நின்றதும், இவர்கள் தாங்கள் கொண்டு வந்த பை ஒன்றை ரயிலில் மறந்து விட்டு இறங்கி சென்றனர். அந்த பையில், 18 சவரன் நகைகள் மற்றும் 17,000 மதிப்புள்ள லேப்டாப், ரூ.16 ஆயிரத்து 500 ரொக்கம் உள்ளிட்டவை இருந்தன.
ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்ற பின்னர் தான் பேக் ரயிலில் தவற விட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அதற்குள் ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. உடனடியாக இது குறித்து கணேஷ் செந்தில்குமார் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாகவே செல்லும் என்பதால், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், டவுன் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். அப்போது ரயில் அங்கு நின்று கொண்டிருந்தது.
உடனடியாக கணேஷ் செந்தில்குமார் பயணம் செய்த எஸ்.2 கோச்சில் சீட் எண் 66, 67, 69 ல் சோதனை செய்தனர். அப்போது சீட் எண் 71ல் கணேஷ் செந்தில்குமார் கூறிய அடையாளத்துடன் பை கேட்பாரற்று கிடந்தது. அதில் நகை, பணம், லேப்டாப் உள்ளிட்டவை அப்படியே இருந்தன. உடனடியாக கணேஷ் செந்தில்குமாரை வரவழைத்து, அதை போலீசார் ஒப்படைத்தனர். ஆரல்வாய்மொழியில் இறங்குவதற்கு முன், பையுடன் கீழே இறங்க தயார் நிலையில் இருந்துள்ளனர். ஆனால் நிறுத்தத்தில் இறங்கும் போது அந்த பையை அருகில் உள்ள இருக்கையில் மறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது. தங்க நகைகள் மற்றும் பணம், பொருட்களை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு கணேஷ் செந்தில்குமார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.