திருத்தணி-பொதட்டூர்பேட்டை இடையே ரூ.7.41 கோடியில் நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலப்பணிகள் விறுவிறு; 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி
திருத்தணி, ஆக.22: திருத்தணி-பொதட்டூர்பேட்டை இடையில் நந்தி ஆற்றில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருவதால் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டைக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தினமும் 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. விவசாயிகள், நெசவாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் சென்று வரும் பிரதான சாலையாக இது உள்ளது. இச்சாலையில், தெக்களூர் அருகே நந்தி ஆறு பாய்கிறது. ஆற்றில் உள்ள தரைமட்ட பாலத்தை கடந்து வாகனங்கள் சென்று வருகின்றன. மழை காலங்களில் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் திருத்தணி-பொதடூர்பேட்டை இடையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதனால் கிராம மக்கள் வேறு வழியில் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலையில் பாதிக்கப்பட்டு வந்தனர். மழை காலங்களில் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் துறை சார்பில் மத்திய சாலைகள் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.7.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை சென்னை கோட்டத்தின் சார்பில் டெண்டர் கோரப்பட்டு கடந்த மார்ச் மாதம் நந்தி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டைக்குச் செல்லும் 20 கி.மீ இடையில் உள்ள திருத்தணி, புச்சிரெட்டிப்பள்ளி, கிருஷ்ணசமுத்திரம், தெக்களூர், கீச்சலம், நெடுங்கல், ராமசமுத்திரம், பொதட்டூர்பேட்டை உட்பட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகள், நெசவாளர்கள், வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் மழை காலங்களில் தடையின்றி ஆற்றை கடந்து செல்ல வசதி ஏற்பட்டுள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச்சில் பணிகள் நிறைவு
நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. நடைபாதை உட்பட 12 மீட்டர் அகலம், 104 மீட்டர் நீளத்தில் உயர்மட்ட பாலம் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், மார்ச் மாதம் பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பணி முடிக்கப்படும். உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைக்கப்பட்டு அதில் வாகனங்கள் தடையின்றி பயணம் சென்று வருவதாக தேசிய நெடுஞ்சாலைகள் துறை கோட்ட உதவி பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.