விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
ஊத்துக்கோட்டை, ஆக.21: விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ஊத்துக்கோட்டையில் நேற்று சிலை அமைப்பாளர்களுக்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதில், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊத்துக்கோட்டை, பென்னாலூர்பேட்டை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை, பென்னாலூர்பேட்டை மற்றும் பாலவாக்கம், தாராட்சி, சூளைமேனி, தாமரைக்குப்பம், சீத்தஞ்சேரி, போந்தவாக்கம், கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இதில், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமை தாங்கினார். ஏட்டு அருணகிரி வரவேற்றார். கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் தேவராஜ் பேசியதாவது: களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகள்தான் வைக்க வேண்டும். சிலை வைப்பதற்கு முன்பு எந்த இடத்தில் சிலை வைக்கிறீர்கள் என போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். காலை, மாலை நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே ஒலி பெருக்கியை பயன்படுத்த வேண்டும். அதில் பக்தி பாடல்களை மட்டுமே ஒலிபரப்ப வேண்டும். குத்து பாட்டு போடக்கூடாது. விநாயகர் சிலை அருகிலும், சிலை கரைக்கக்கூடிய இடத்திலும் பட்டாசு வெடிக்கக்கூடாது. விழாவிற்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடக்கூடாது, அனுமதி பெற்ற மின்சாரத்தையே பயன்படுத்த வேண்டும். அரசியல் கட்சி, சாதி கட்சி தலைவர்களின் பேனர்களை வைக்கக்கூடாது. போலீசார் அனுமதி வழங்கிய இடத்தில்தான் சிலைகளை கரைக்க வேண்டும். பகல் 12 மணிக்குள் சிலைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
இதில், ஊத்துக்கோட்டை, பென்னாலூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலை அமைப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி வரவேற்றார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் பேசுகையில், ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். சிலைகளை கரைப்பதற்கு முன்பு அலங்கார பொருட்களை அகற்ற வேண்டும். புதிய இடத்தில் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் எவரேனும் ஈடுபட்டால் விழா குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை அமைப்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்றார்.