பாதாள சாக்கடை பணிக்கு எதிர்ப்பு 2வது நாளாக சாலை மறியல் 100க்கும் மேற்பட்டோர் கைது: பொன்னேரி அருகே பரபரப்பு
பொன்னேரி, ஆக.20: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் ஆரணி ஆற்றில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆற்றில் தண்ணீரை வெளியேற்ற பொதுமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர். 2வது நாளாக நேற்று சின்னக்காவனம் கூட்டுச்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றுவதால் கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் குடிநீர் மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தரதரவென இழுத்துச்சென்று பேருந்தில் ஏற்றி கைது செய்தனர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில் பெண்கள், ஆண்கள் என பாரபட்சமின்றி குண்டு கட்டாக தூக்கிச் சென்று 100க்கும் மேற்பட்டோரை பேருந்துகளில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு 2வது நாளாக பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மீண்டும் ஒன்றிணையும் மக்களை போலீசார் தொடர்ந்து பேருந்துகளில் ஏற்றி கைது செய்து வருகின்றனர்.