ஆவடி பேருந்து நிலையம் எதிரே காவல்துறையிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்பு நிலம் மீட்பு; வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி
ஆவடி, ஆக. 20: ஆவடி பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு பட்டாலியன் காவல்துறை சார்பில் பரணி சைக்கிள் ஸ்டாண்ட், பரணி கேன்டின் ஆகியவை கடந்த 30 ஆண்டாக இயங்கி வருகிறது. ஆவடி வருவாய் துறைக்குச் சொந்தமான சுமார் 97 சென்ட் நிலத்தை காவல் துறையினர் வணிக நோக்கத்தில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் பார்க்கிங் செய்யும் இடமாக பயன்படுத்தி வந்ததாக புகார் எழுந்தது. இந்த இடத்தின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும். அந்த இடத்தில் ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் சுமார் 1,650 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.4.5 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை சார்பில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில், ஆவடி வட்டாட்சியர் காயத்ரி, ஆவடி துணை வட்டாட்சியர் விஜய் ஆனந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்து பார்க்கிங் பகுதிக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் இன்று முதல் பரணி சைக்கிள் பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை எனவும், உள்ளே இருக்கும் வாகனங்களை வெளியே அனுப்பி கண்காணிக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 30 ஆண்டு காலமாக காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய் துறையினர் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.