மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் வரும் 25ம்தேதிக்குள் இந்திய குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரதாப் தகவல்
திருவள்ளூர், நவ.19: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேர்வதற்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு வரும் 25ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து 2025-26ம் ஆண்டுக்கு 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது’. அதன்படி, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களான இளைஞர்கள் பயிற்சி திட்டத்தின் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மண்டல இணை இயக்குநர் சென்னை அலுவலகத்திலோ அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் பொன்னேரி அலுவலகத்திலோ அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பூர்த்தி செய்து, பொன்னேரியில் உள்ள உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு சென்னையில் உள்ள மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது உதவி இயக்குநர் அலுவலகம் எண்.5, பாலாஜி தெரு, சங்கர் நகர், வேண்பாக்கம், பொன்னேரி என்ற அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது 044-27972457 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.