திருவாலங்காடு அருகே ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் சிட்கோ தொழிற்பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்
திருத்தணி,செப்.17: திருவாலங்காடு பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் சிட்கோ தொழிற் பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காடி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் சிட்கோ தொழிற்பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாலங்காடு ஒன்றியம் வறட்சி நிறைந்த பகுதியாக உள்ளதால், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு பெற வசதியாக சிட்கோ தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என்று திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக காவேரிராஜபுரம் பகுதியில் 29.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் தொழில் மனைகள் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொழிற்பூங்கா மூலம் நேரடியாக 500 பேரும், மறைமுகமாக 800 பேரும் வேலை வாய்ப்பு பெற உள்ளனர்.
இந்நிலையில் சிட்கோ தொழிற்பூங்கா துவக்க விழா காவேரிராஜபுரம் சிட்கோ தொழிற்பூங்காவில் நடந்தது. சிட்கோ மேலாளர் நந்தகுமார், உதவி பொறியாளர் வள்ளுவன் ஆகியோர் வரவேற்றனர். திருவள்ளூர் தொகுதி வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கிராமங்கள் நிறைந்த திருவாலங்காடு பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தார். இவ்விழாவில், திமுக ஒன்றிய செயலாளர்கள் எஸ்.மகாலிங்கம், மோ.ரமேஷ், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாரதி, மாவட்ட அமைப்பாளர் வி.எஸ்.நேதாஜி, வழக்கறிஞர் ராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி தினகரன், முனிகிருஷ்ணன் ஏழுமலை, ஏகாம்பரம், செல்வம், மாருதி பிரசாத், மணிகண்டன், செஞ்செய்யா, சத்யா, காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.