திருத்தணியில் பல்பொருள் கண்காட்சி முகாம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
திருத்தணி, ஆக.15: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் செய்தி தொடர்பு துறை, அனைத்து துறைகள் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் பல்பொருள் கண்காட்சி முகாம் பேருந்து நிலையம் அருகில் சன்னதி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை கலெக்டர் மு.பிரதாப் முன்னிலையில் அமைச்சர் சா.மு.நாசர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பல்வேறு துறை அரங்குகளை பார்வையிட்டார். ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ள 5 நாட்களும் கண்காட்சி முகாம் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி ம.கிரண், கோட்டாட்சியர் கனிமொழி, நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், நகரமன்ற துணைத் தலைவர் சாமிராஜ், நகர திமுக செயலாளர் வினோத்குமார், நகர துணை செயலாளர் கணேசன், நகரமன்ற உறுப்பினர் அசோக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.