குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீண் காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்
புழல், ஆக.15: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட புழல் அடுத்த காவாங்கரை, அழகிரி தெருவில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட சின்டக்ஸ் குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகமின்றி உள்ளது. இதுகுறித்து, பலமுறை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து மாதவரம் மேற்கு பகுதி தேமுதிக செயலாளர் புழல் நாகராஜன் தலைமையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் திருப்பதி, ரோஜாஸ், உமாபதி மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்கள் காலி குடங்களுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்குள் துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பை மீண்டும் சீரமைத்து, குடிநீர் தொட்டியை நிரப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.