வடமதுரை ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் துணை சுகாதார நிலையம்
ஊத்துக்கோட்டை, செப்.13: வடமதுரை ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி பேட்டைமேடு கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் விதமாக இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. உள்ளது. இதில் டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதித்து ஊசி போடவும், கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு என இரண்டு அறைகள் உள்ளன.
இங்கு வடமதுரை, பேட்டைமேடு, பெரியகாலணி, சின்னகாலணி, ஏரிகுப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்றுவந்தனர். பிரசவ அறையின் மேற்கூரை ஓடுகள் உடைந்து பெரிய ஓட்டை விழுந்துள்ளது. கட்டிடதை சுற்றிலும் முட்புதர்கள் மண்டிக்கிடந்ததால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் துணை சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் பெண்கள், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் அருகே உள்ள இ-சேவை மையத்திற்கு மாற்றப்பட்டது. மருத்துவ சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாததால் நோயாளிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு துணை சுகாதார நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆரம்ப துணை சுகாதார நிலையம் புதர்கள் மண்டி கிடப்பதால் அருகில் உள்ள இசேவை மையத்தில் சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, டாக்டர்கள் சரிவர வராத நிலையில், நர்ஸ்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அவசர காலங்களில் உடல்நிலை பாதித்தோரை பெரியபாளையத்தில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், முதலுதவி சிகிச்சை தாமதமாகிறது. எனவே, பழைய சுகாதார நிலையத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், டாக்டர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும், என்று கோரிக்கைவிடுக்கின்றனர்.