வண்டல் மண் விற்பனை தடுக்க வேண்டும்: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
திருத்தணி,செப்.13: விவசாய பணிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் வண்டல் மண்ணை சிலர் முறைகேடாக விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தினர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் நடந்தது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறிப்பாக, விவசாயிகள் தங்களின் நிலங்கள் சமன் செய்து பயிர் சாகுபடி செய்து பயன் பெற வசதியாக அரசு ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. சிட்ட நகலுடன் கணினியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு தாசில்தார் அனுமதி வழங்கி வருகிறார். இதனால் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையில் வண்டல் மண் எடுக்க அளவீடு செய்து தர வேண்டிய நிலையில், சிலர் அதிகாரிகள் உதவியுடன் அனுமதி மீறி ஜேசிபிகள் மூலம் டிராக்டர்களில் வண்டல் மண் எடுததுச் சென்று வீட்டு மனைகளுக்கு, செங்கல் சூளைகளில் யூனிட் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர், என்று குற்றம் சாட்டினர்.
கிருஷ்ணமராஜுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஏரியில் கடந்த 10 நாட்களாக 30க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் அதிக ஆழம் தோண்டி வண்டல் மண் திருடப்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதேபோல் திருத்தணி ஒன்றியம் சிங்கராஜபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் தண்ணீர் திருப்பி விடுவதால், விளை நிலம் பாதிக்கப்படுவதை காவல் நிலையத்தில் பலமுறை புகார் செய்தாலும் காவலர்கள் நடவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டுவதாக விவசாயி குற்றம் சாட்டினர். ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பெரிய நாகபூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் விதிகளுக்கு புறம்பாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் செய்தனர். பருவமனை மாற்றமடைந்துள்ளதால் நோய் தொற்று பரவுவதை தடுக்க அனைத்து பகுதிகளிலும் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.