அதிகாரிகளை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
புழல், அக்.12: சோழவரம் அடுத்த காரனோடையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தனியார் பள்ளிகள், வங்கிகள், கடை வீதி என பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால், அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காரனோடை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 3 முறை தீர்மானம் நிறைவேற்றியும், டாஸ்மாக் கடையை அகற்றாதது ஏன் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
இதேபோல் சோழவரம் அடுத்து அத்திப்பேடு ஊராட்சியில் சாலை பணிகளுக்காக ஊராட்சிமன்ற கட்டிடம், கிராம சேவை கட்டிடம், அங்கன்வாடி மையம் உட்பட 5 கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, இழப்பீடு தொகை ஊரக வளர்ச்சித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, அத்திப்பேடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
அக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் தங்களது கிராமத்திற்கான ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டும் அதிகாரிகளை கண்டித்து, கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். ஊராட்சி மன்ற அலுவலகமே இல்லாத நிலையில் கிராம சபை கூட்டம் எதற்கு என கேள்வி எழுப்பினர். கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்களிடம் தொடர்ந்து உள்ளாட்சி துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) வசந்தகுமார் தலைமை தாங்கினார். இதில், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக வந்த துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜ்குமாரிடம், அடிப்படை வசதிகளி கோரி சராமாரி கேள்வி எழுப்பி கிராம சபையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகர், குணசேகர் சமரசம் செய்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அதன்பிறகு, கிராம சபை கூட்டம் நடந்தது. இதே போல் கன்னிகைப்பேர், திருக்கண்டலம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் உமாநாத் தலைமையிலும், வெங்கல் ஊராட்சியில் செயலாளர் உமாபதி தலைமையிலும், வடமதுரையில் கல்பனா தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.