திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
திருவள்ளூர், அக்.12: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை காரணமாக கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரை புரண்டு ஓடுவதால், பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், சத்தரை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தற்போது மீண்டும் தரைப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சத்தரை பகுதியில் இருந்து கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 14 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு காரணமாக சத்தரை - கூவம் ஆற்றின் வழியாக பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கிச் செல்லாத வகையில் பொதுப்பணித்துறை சார்பில் கரையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பதாகைகள் வைத்துள்ளனர்.
இதன் காரணமாக திருவள்ளூர், கடம்பத்தூர் பகுதியில் இருந்து மப்பேடு, கீழச்சேரி சுங்குவார்சத்திரம், உளுந்தை போன்ற பகுதிகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் பேரம்பாக்கம் வழியாகச் சென்று சுமார் 5 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு செல்வதால் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.