வீட்டின் அருகே மதுகுடிப்பதை கண்டித்த தொழிலாளியை கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஆர்.கே.பேட்டை, ஆக. 12: வீட்டின் அருகே மதுகுடிப்பதை கண்டித்த தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி ராஜேந்திரன்(60). காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் நெசவு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு, 12.30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது மர்ம நபர் ராஜேந்திரனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பினார். காலையில் ராஜேந்திரன் கொலை செய்யபட்டு கிடப்பதைக் கண்ட குடும்பத்தினர் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன்(31) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், ஹரிகிருஷ்ணன் நள்ளிரவில் ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததை கண்டித்ததால் ஆத்திரமடைந்து கல்லால் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள அரிகிருஷ்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி விவேகானந்த சுக்லா, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, அரிகிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதாப் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அரிகிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.