திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றிவந்த 300 வாகனங்கள் காத்திருப்பு
திருத்தணி, நவ.11: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றிவந்த 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு டோக்கன் போட 24 மணி நேரம் வாகனங்களில் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதம் 24ம்தேதி கரும்பு அரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 2200 டன் கரும்பு அரைக்கப்படுகிறது. ஆலைக்கு கரும்பு அனுப்ப முன்பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வெட்டு அனுமதி பெற்று விவசாயிகள் கூலி ஆட்கள் வைத்து கரும்பு வெட்டி கட்டுகளாக கட்டி லாரி, டிராக்டர்களில் ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி அருகே ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள ஆந்திர கரும்பு விவசாயிகள் கரும்பு வெட்டி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் ஆலைக்கு கரும்பு வரத்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரும்பு லோடு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் சர்க்கரை ஆலை மற்றும் ஆலைக்கு வெளிப்புறத்தில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
இதுகுறித்து திருத்தணி பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் கூறுகையில், ‘திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை தொடங்கி நடைபெற்று வருகிறது’. ஆலை நிர்வாகத்தில் வெட்டு அனுமதி பெறப்பட்டு கரும்பு ஆலை சார்பில் வாகனங்கள் அனுப்பி வைத்து ஆலைக்கு கரும்பு அனுப்பப்படுகிறது. இருப்பினும் ஆலை நிர்வாகம் சார்பில் அத்திமாஞ்சேரிப்பேட்டை, நெமிலி, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் பணியாற்ற வரும் கரும்பு அலுவலர்கள் மணி, நாராயணன் ஆகியோர் ஆந்திராவில் ஏஜென்டுகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கரும்பு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து முறைகேடாக திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருவதால் கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, பகுதிகளில் கரும்பு விவசாயிகள் வெட்டிய கரும்பு 4 நாட்களாக காய்ந்து எடை குறைந்து வருவதாக குற்றம் சாட்டினர். மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆந்திராவில் இருந்து கரும்பு வரத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.