ஆன்லைன் டிரேடிங் உள்ளிட்ட குற்றங்களில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.63.40 லட்சம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்
ஆவடி, செப்.11: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் பங்கு வர்த்தகம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், ஆவடி காவல் ஆணையாளர் சங்கரிடம் புகார் அளித்திருந்தனர். இந்தநிலையில், இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் அர்னால்ட் ஈஸ்டர் மேற்பார்வையில், இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், பொதுமக்கள் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளுக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கினர். சைபர் க்ரைமில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9 வழக்குகளில் மொத்தம் 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஆகஸ்ட் 6ம் தேதி முதல் இம்மாதம் 9ம் தேதி வரை மோசடி நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து 29 வழக்குகளில் மொத்தம் ரூ.63,40,272 பணம் மீட்கப்பட்டுள்ளது. அந்த பணம், நீதிமன்ற ஆணை பெற்று ஆன்லைன் மோசடி மூலமாக பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டுக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆவடி காவல் ஆணையாளரிடம் அதற்கான சான்றிதழை பெற்று, அவருக்கு நன்றி தெரிவித்தனர். இணையவழி மோசடிகள் மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசாரை ஆவடி காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.