திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் கிராம அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருவள்ளூர், செப்.10: திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஒன்றியம், கொப்பூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் விஸ்வநாதன் (45). கடந்த 6ம் தேதி மாவட்ட கலெக்டரின் வாய்மொழி உத்தரவின்பேரில், கொப்பூர் ஊராட்சியில் உள்ள சித்தேரி தூர்வாரும் பணிக்காக தனியார் கம்பெனியின் தன்னார்வலர்கள் பூஜை போட்டனர். இதனையடுத்து, கடந்த 7ம்தேதி காலை பணி தொடங்கப்பட்டது. இதுகுறித்து கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி உதவியாளரிடம், அரசு உத்தரவு குறித்து கேட்டுள்ளனர். அப்போது, கலெக்டர் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தனியார் கம்பெனியின் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது, அவரிடம் அரசு உத்தரவு இருந்தால்தான் பணி செய்வாயா என கேட்டு, அவரை பணி விடுவிப்பு செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தார். இதனையடுத்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர், திருவள்ளூர் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரனிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 30க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதனை, வெங்கல்குப்பம் கிராம நிர்வாக அலுவலராக பணிநியமனம் செய்து வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.