முன்னாள் படை வீரர்களுக்கான சட்டப் பணிகள் உதவி மையம்
திருவள்ளூர், செப்.9: முன்னாள் படை வீரர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சட்டப் பணிகள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, முன்னாள் படை வீரர்களின் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வ ஆலோசனை வழங்கிட மாவட்ட சட்டபணிகள் உதவி மையம் திருவள்ளூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் பிரதி வாரம் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 1.30 வரை செயல்படும். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள், சட்டப்பூர்வ ஆலோசனைகள் பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், 044 -29595311 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.