காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: எம்.பி, கலெக்டர், எஸ்.பி, எம்எல்ஏ அஞ்சலி
திருத்தணி, டிச.7: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த திருத்தணி பகுதியைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேல் என்பவரின் மகன் சக்திவேல்(30). இந்திய ராணுவத்தில் 2018ம் ஆண்டு பணியில் சேர்ந்து காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக்திவேல் குண்டடிப்பட்டு வீர மரணம் அடைந்தார். அவரது உடல் காஷ்மீர் ராணுவ முகாமிலிருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று காலை சென்னையில் இருந்து ராணுவ ஆம்புலன்ஸ் மூலம், திருத்தணி அருகே சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பார்த்து அவரது மனைவி, பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர். இறந்த ராணுவ வீரர் உடலுக்கு மெட்ராஸ் என்சிசி படையைச் சேர்ந்த வீரர்கள் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், எஸ்.பி.விவேகானந்தா சுக்லா, எஸ்.சந்திரன் எம்எல்ஏ உள்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து மாலை, ராணுவ வீரர் சக்திவேல் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடியை அவரது மனைவி தேவஸ்ரீயிடம் என்சிசி வீரர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலம் நடைபெற்று கிராம மயானத்தில் டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் முன்னிலையில் 21 குண்டுகள் முழங்க போலீசார் அரசு மரியாதை செலுத்திய பின்னர் ராணுவ வீரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.