போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
புழல், ஆக.7: புழலில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புழல் அருகே 2 பேர் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாலிபர்களுக்கு விற்பனை செய்வதாக கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் புழல் கேம்ப் அம்பேத்கர் சிலை சந்திப்பு சாலை அருகே மாறுவேடத்தில் புழல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு இளம் வாலிபர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், புழல் நீதிதாசன் தெருவைச் சேர்ந்த மேகநாதன் (18) மற்றும் அவரது நண்பரான கோழி கோவிந்தராஜ் (23) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, புழல் பகுதி வாலிபர்களுக்கு விற்பனை செய்ததும், இதில் கோழி கோவிந்தராஜ் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதும், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 70 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை ேநற்று மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.