சாலையில் நடந்து சென்றபோது டிப்பர் லாரி மோதியதில் தலை நசுங்கி பெண் பலி
புழல், ஆக. 6: சோழவரம் ஒன்றியம், நத்தம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் நடராஜன்-சாந்தி தம்பதி. இவர்களுக்கு பாலா, பிரேமா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணத்தை நடத்தி முடித்து விட்டனர். இதில், சாந்தி (55) பண்டிக்காவனூர் கிராமத்தில் உள்ள சிமெண்ட் கற்கள் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து தனியார் தொழிற்சாலையில் இருந்து வீட்டை நோக்கி சாந்தி நடந்து சென்றார். அப்போது மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் தலை சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சாந்தி பலியானார். தகவல் அறிந்த கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சோழவரம் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். தலைமறைவான லாரி டிரைவரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சாந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.