பாடியநல்லூர் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி: கலெக்டர் பிரதாப் ஆய்வு
புழல், டிச.5: செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகா மேரு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையால், தாழ்வான பகுதிகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கி குளம்போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பாடியநல்லூர் ஊராட்சி சார்பில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணி விறு விறுப்பாக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மகாமேரு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, தேங்கியிருக்கும் மழைநீரை உடனுக்குடன் உடனடியாக அகற்றிட வேண்டுமென அங்கிருந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நாங்கள் இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவமழை காலங்களில், பல மாதங்களாக தண்ணீர் தேங்கி இருப்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். மழை பெய்கின்ற காலங்களில் நிற்கின்ற மழைநீரை பார்த்து விட்டு, எங்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு செல்கின்ற அதிகாரிகள், இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய மழைநீர் கால்வாய்களை அமைத்து, சம்பந்தப்பட்ட ஏரிகளுக்கு மழைநீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அப்பொழுது பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் காளியம்மாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், சோழவரம் ஒன்றியம் உதவி பொறியாளர் திருமலைசாமி, ஊராட்சி செயலர் லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.