பழவேற்காட்டில் ரூ.2 கோடியில் சூழலியல் பூங்கா ஆயத்த பணிகள் தீவிரம்: கலெக்டர் பிரதாப் தகவல்
திருவள்ளுர், அக்.4: பழவேற்காட்டில் ரூ.2 கோடியில் சூழலியல் சுற்றுலா பூங்கா அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் பிரதாப் தெரிவித்தார். திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாசூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோயிலில் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினத்ததை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, கலெக்டர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது: ‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது’. திருவள்ளூர் மாவட்டம் வாசிஸ்வரர் கோயிலில் கலை நிகழ்ச்சி மற்றும் மரம் நடும் விழாவினை தொடங்கி வைத்து, 50 மரங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் வந்தபோது, பழவேற்காடு பகுதியில் சூழலியல் சுற்றுலா மேம்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில், ரூ.2 கோடியில் பழவேற்காட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை கிடைத்தவுடன் சுற்றுலா தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும். படகு குளம், படகு சவாரி மற்றும் ஒரு சிறிய பொழுதுபோக்கு விளையாட்டு, அட்வென்சர் டூரிசம் போன்றவைகள் அங்கு எற்படுத்தப்படவுள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர எல்லைகுட்பட்ட குடியம் குகை மிகச் சிறப்பாக பசுமையான ஒரு இடம் தமிழ்நாடு அரசு சார்பில் மலையேற்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் முக்கியமான இணையதள செயலி வாயிலாக தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது. அச்செயலியில் ட்ரக்கிங் ரூட்டாக குடியம் குகை பதிவு செய்து விண்ணப்பித்ததுடன் இடங்களை நம் பார்வையிடலாம் அங்கேயும் சுற்றுலா தொடர்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுலா தொடர்பாக எவ்வாறு பணிகளை மேற்கொள்ளலாம் என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், திருத்தணியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவதினால், அந்த பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை சார்பாக கார்த்திகேயன் குடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த, மாஸ்டர் பிளானில் கோபுரங்கள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அமருமிடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து வருகிறோம். அதேபோல், 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலா துறை மூலமாக ஆன்மீக சுற்றுலாவுக்கான தளங்கள் ஒரு பொழுதுபோக்கு பூங்கா அமைக்க ஆயத்து பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். இதுபோன்று, பல்வேறு பணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறோம். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் சுப்பிரமணிய சாமி கோயில் இணை ஆணையர் ரமணி, மாவட்ட சுற்றுலா அலுவலர்(பொ) ஜெயஸ்ரீ சாய்ஜி, கோயில் உதவி ஆணையர் சிவஞானம், மற்றும் ஆய்வாளர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.