ஆந்திராவில் மகசூல் 2 மடங்கு அதிகரித்ததால் வாழைப்பழ விலை கடும் வீழ்ச்சி
சென்னை, டிச.3: வாழைப் பழங்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், போதிய விற்பனையின்றி வீணாகி வருவதால், வியாபாரிகள் கால்நடைகள் மற்றும் குரங்களுக்கு உணவாக கொட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள ரயில்வே கோடூர், ராஜம்பேட்டை ஆகிய பகுதிகள் வாழை சாகுபடியில் இந்திய அளவில் பெயர் பெற்றது. இப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்கின்றனர். அங்கு சாகுபடி செய்யப்படும் வாழைப்பழங்கள் சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று வியாபாரிகள் மொத்தமாகவும் மற்றும் சில்லரை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆந்திராவில் மழை அதிக அளவில் பொழிந்ததால், வாழை மகசூல் இரண்டு மடங்கு அதிகரித்தது. தற்போது, வாழை அறுவடை நடைபெற்று வருகிறது. வாழை தார்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர். மகசூல் அதிகரித்துள்ள நிலையில் தோட்டத்தில் பழுத்து விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விலை பல ஆண்டுகளாக இல்லாத அளவில் சரிந்து கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கிலோ 5க்கு தோட்டத்தில் விற்பனை ஆந்திராவில் உள்ள வாழைத் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள், பச்சை வாழைப்பழங்களை பொறுத்தவரை கடந்த மாதம் வரை கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை மொத்தமாக தோட்டங்களில் வியாபாரிகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். தற்போது, மகசூல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், விற்பனை குறைந்த நிலையில் தோட்டங்களில் விவசாயிகள் கிலோ ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.10க்கு வாழைப் பழங்கள் விற்பனை செய்கின்றனர்.
விலை வீழ்ச்சியால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பகுதிகளை சேர்ந்த வாழைப்பழ வியாபாரிகள் வேன்களில் ஆந்திராவிற்கு சென்று கூலி ஆட்கள் வைத்து தோட்டத்தில் இருந்து வாழை தார்கள் அறுவடை செய்து எடை போட்டு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். விலை குறைவாக இருப்பதாலும், விற்பனை வெகுவாக குறைந்ததால், பழங்கள் பழுத்து அழுகி வீணாகி வருகிறது. இதனால், குரங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவாக வாழைப்பழங்கள் கொட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். டன்னுக்கு ரூ.5 ஆயிரம் நஷ்டம்: அத்திமாஞ்சேரிப்பேட்டை வாழைப்பழ வியாபாரி சின்னக்கண்ணு: ரயில்வே கோடூரில் தோட்டங்களில் இருந்து வாழைப்பழங்கள் கொள்முதல் செய்து கொண்டு வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விற்பனை குறைந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
ரயில்வே கோடூருக்கு வேன் வாடகை, தொழிலாளர்களுக்கு கூலி சேர்த்து ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகிறது. வாழைப்பழங்கள் ஆந்திராவில் குறைந்த விலைக்கு கொண்டு வந்தாலும் வாடகை, தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டியதால், கிலோவுக்கு ரூ.20 செலவாகிறது. போதிய விற்பனையின்றி அதிக அளவில் பழுத்து அழுகுவதால், நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தார். சந்தைகளில் சீப்பு ரூ.10க்கு விற்பனை: வாழைப்பழங்கள் அதிக அளவில் மகசூல் அதிகரிப்பால், ஆந்திராவில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாகனங்களில் வாழைப்பழங்களை எடுத்து வந்து கிராம பகுதிகளில் சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். ரூ.50 மதிப்புள்ள ஒரு சீப் பழம் ரூ.10க்கு விற்கப்படுகிறது. இருப்பினும், போதிய விற்பனை இல்லாததால், ஆடு மாடுகள், குரங்குகளுக்கு உணவாக கொட்டி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.