சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.81 லட்சம் உண்டியல் காணிக்கை
பெரியபாளையம், நவ.1: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு, 6 வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால், செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 72 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் உதவி ஆணையர்கள் சிவஞானம், விஜயகுமார், கோயில் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ 81லட்சத்து 715 ரூபாயும், தங்கம் 89 கிராமும், வெள்ளி 5 கிலோ 903 கிராம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.