ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் 163 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆவடி, ஜூலை 29: ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. மேயர் உதயகுமார் தலைமை தாங்கினார். கமிஷனர் சரண்யா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது: மேகலா னிவாசன் (காங்.): விவேகானந்தா தெருவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு 9 மாதங்களாக பழுதாகி உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் விளிஞ்சியம்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள துளசி தெருவில் இடுப்பளவுக்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது. அதை சீரமைக்க 300 மீட்டர் தூரத்துக்கு இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும்.
ரவி (தி.மு.க.): புழல் ஏரியில் இருந்து குழாய் மூலமாக ஆவடிக்கு குடிநீர் வருகிறது. ஆனால், இதுவரை எங்கள் வார்டுக்கு குடிநீர் சப்ளை செய்யவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். உட்புற சாலைகளில் திறந்த நிலையில் உள்ள கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமதி (தி.மு.க.): எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து தொடங்க வேண்டும். சாலைகளில் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்ற வேண்டும். முக்கிய சந்திப்புகளில், குறைந்த வெளிச்சம் உடைய எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி சட்ட விரோத செயல் நடக்கிறது. ஜீவானந்தம் தெருவில், குடிநீர் கசிவை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான் (மா.கம்யூ.,): ஜாக் நகர், ராணி அண்ணா தெரு, விஜய லட்சுமி அவென்யூவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகள் முறையாக செய்யவில்லை. இதனால், குடிநீர் வினியோகம் செய்யும்போது, குழாய்களில் குடிநீர் கசிவு ஏற்பட்டு, மேற்கூறிய சாலைகளில் குடிநீர் ஆறாக ஓடுகிறது. அதை சீரமைக்க வேண்டும்.
பைரவி (தி.மு.க.): எங்கள் வார்டில் நான்கு மாதமாக சாக்கடை பிரச்சனை உள்ளது. மாநகராட்சி வாகனங்கள் மூலமாக அடிக்கடி வந்து கழிவு நீரை அகற்றி வருகின்றனர். இருப்பினும் சன்னதி தெருவில் இப்பிரச்னை தொடர்ந்து நீடிக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்றார். அதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் 163 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.