வீட்டுக்குள் விளையாடியபோது வாளி நீரில் தவறி விழுந்து பெண் குழந்தை பரிதாப பலி
பூந்தமல்லி, ஆக. 3: மதுரவாயல் அடுத்த வானகரம், பாப்பம்மாள் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் அசோத்தமன் (36), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சவுமியா (30). இந்த தம்பதிக்கு 3 வயது மற்றும் ஒரு வயதில் தீக்சா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இந்தநிலையில் சவுமியா மூத்த மகளுக்கு நேற்று முன்தினம் மாலை மருந்து கொடுத்துவிட்டு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீக்சா திடீரென காணாமல் போனதைக் கண்டு சவுமியா, வீட்டிற்குள் தேடினார். பல இடங்களில் தேடிய அவர் குளியலறைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் நிரப்பி வைத்திருந்த வாளிக்குள் குழந்தை தீக்சா தலைகுப்புற நீரில் மூழ்கி கவிழ்ந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வானகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வானகரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சம்பவ இடத்திற்குச் சென்று இறந்துபோன குழந்தை தீக்சா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் நிறைந்த வாளிக்குள் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.