கரும்பு விவசாயிகளுக்கு ரூ.5.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை விடுவிப்பு: கலெக்டர் தகவல்
திருவள்ளூர், ஜூலை 31: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருத்தணி கூட்டுறவு சர்க்கரையில் 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு 1,52,982.310 மெட்ரிக் டன் அரவை செய்யப்பட்டது. இந்த, அரவை பருவத்திற்கு கரும்பு சப்ளை செய்த மொத்தம் 1,526 விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் மொத்த தொகையாக ரூ.5.34 கோடி கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த, சிறப்பு ஊக்கத்தொகையினை கரும்பு பதிவு செய்து, சப்ளை செய்த விவசாயிகளுக்கு விரைந்து வழங்கியதற்காக முதல்வர், வேளாண்மைத்துறை அமைச்சர், சர்க்கரைத்துறை அமைச்சர், வேளாண் உற்பத்தி ஆணையர் (ம) செயலர், சர்க்கரைத்துறை இயக்குநர், திருவள்ளூர் கலெக்டர், ராணிப்பேட்டை கலெக்டர் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோருக்கு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டத்தின் மூலம் 2025-26ம் ஆண்டு நடவு பருவத்தில் புதிய நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு, ஆலையின் மூலம் அகலபாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவிற்கு ஏக்கருக்கு ரூ.7,450 மானியமும், அகலபாருடன் கூடிய ஒரு பருவிதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,200 மானியமும் வழங்கப்படவுள்ளது. எனவே, அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து ஆலைக்கு பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.