குழந்தைகள் நலன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர், ஜூலை 31: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கீழ் வெளியிடப்பட்ட அரசாணையின்படி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. விருதுகள் பெற இளைஞர் நீதி சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015ன் கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களை பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து 5 வருட காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்த ஒரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றிக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் விருதுகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 118, முதல் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.