ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாம் வாலிபருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்: வழக்கறிஞர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு
திருவள்ளூர், ஜூலை 30: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை மர்ம நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 25ம் தேதி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அதன்பேரில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவை புழல் மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர்.
3 கட்டங்களாக நடந்த விசாரணையின்போது நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் குற்றவாளி ராஜு பிஸ்வகர்மா நீதிமன்றத்திலேயே கன்னத்தில் கை வைத்தபடி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் 3வது கட்ட விசாரணைக்காக 4 மணியளவில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிபதி ஆகஸ்ட் 2ந் தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது குற்றவாளியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்றும், தேவையான உணவு அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததை தொடர்ந்து அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது ராஜு பிஸ்வகர்மாவை வழக்கறிஞர்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வழக்கறிஞர்கள் பிடியிலிருந்து அவரை பத்திரமாக அழைத்துச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றி கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி இவன்தானா என்பதை காவல்துறை நிரூபிக்க தவறிவிட்டது என்றும், அவனது முகத்தை மூடி அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்விகளை எழுப்பி வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் குற்றம் நடந்த சம்பவ இடத்திற்கு குற்றவாளியை அழைத்துச்சென்று அடையாள அணிவகுப்பு நடத்தியும், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று குற்றவாளியின் உடலிலிருந்து உயிரணுக்கள் சேகரித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக போலீஸ் வட்டார தகவல் வெளியாகி உள்ளது.